
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கிடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேசத்தை தென்னாப்பிரிக்கா எளிதாக வென்றது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 382 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 383 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியால் 233 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்து தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் எய்டன் மார்க்ரம் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து அணியின் தொடக்க வீரர்களாக குவின்டன் டி காக் மற்றும் ரீசா ஹென்ரிக்ஸ் ஆகியோர் களத்தில் இறங்கினர். ரீசா 12 ரன்னில் வெளியேற மறு முனையில் குவின்டன் டி காக் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தார்.50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்க அணி 382 ரன்கள் குவித்தது. இதையடுத்து 383 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேச அணி வீரர்கள் விளையாடினர்.
தென்னாப்பிரிக்க அணியின் துல்லியமான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் வங்கதேச அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் மகமதுல்லா மட்டுமே 111 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 46.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேச அணி 233 ரன்கள் மட்டுமே எடுத்து 149 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.