தருமபுரம் ஆதினத்தின் மீது அவதூறு பரப்பி, கொலை மிரட்டல் விடுத்த பாஜக, திமுக நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான்

தருமபுரம் தமிழ்ச்சைவ திருமடத்தின் ஆதீனம் அருட்செல்வர் மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த சுவாமிகள் மீது மயிலாடுதுறை பாஜக மாவட்டத் தலைவர் அகோரம், மாவட்டச் செயலாளர் விக்னேஷ் உள்ளிட்டோருடன், திமுக ஒன்றியச் செயலாளர் திருக்கடையூர் விஜயகுமாரும் சேர்ந்து கூட்டுச்சதி செய்து அவதூறான கருத்துகளைக் கூறி, கொலை மிரட்டல் விடுத்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழர்களின் தனிப்பெரும் சமயமாம் சைவ சமயத்தின் தலைமைப் பீடங்களாகத் திகழ்பவை சைவத் திருமடங்களாகும். சிவநெறியும், செந்தமிழும் வளர்க்கும் பொருட்டு அருட்செல்வர் குருஞான சம்பந்த தேசிய சுவாமிகள் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு 450 ஆண்டுகள் பழம்பெருமை வாய்ந்த திருமடமாக தருமபுரம் சைவமடம் திகழ்கிறது. இறைத் தொண்டுடன், கல்விக்கூடங்கள் மருத்துவமனைகள் ஏற்படுத்தி சமூகத் தொண்டும் புரிகிறது தருமபுரம் சைவமடம். தமிழ்நாட்டின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் அறிவிக்கப்பட்டபோது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அமைக்க தருமபுரம் ஆதீனம் தமக்குச் சொந்தமான 21 ஏக்கர் நிலத்தினைக் கொடையாக வழங்கிய பெருமைக்குரியது.

அத்தகைய சிறப்புமிக்க தருமபுரம் சைவ மடத்தின் தலைமை 27-வது ஆதீனமாக விளங்கும் அருட்செல்வர் மாசிலாமணி தேசிய சுவாமிகள் மீது வேண்டுமென்றே திட்டமிட்டு பொய்யான அவதூறுகளைப் பரப்புவதும், 20 கோடி ரூபாய் பணம் கேட்டு கூலிப்படையினர் மூலம் கொலை மிரட்டல் விடுப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தும் பாஜக, தமிழ்நாட்டில் தமிழ் வளர்க்கும் சைவ மடங்களையும், அதன் தலைமை பதிகளான ஆதினங்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அதன் மூலம் அரசியல் லாபமடையத் துடிக்கிறது. அதன் ஒரு பகுதியாகவே இத்தகைய அவதூறு பரப்புரைகள் இருக்குமோ என்ற ஐயமும் எழுகிறது.

மயிலாடுதுறை பாஜக மாவட்டத் தலைவருடன், திமுக ஒன்றியச் செயலாளரும் இணைந்து கூட்டாக இத்தகைய சதிச்செயல்களில் ஈடுபட்டுள்ளது பெருமைக்குரிய தமிழர் மெய்யியல் அடையாளங்களை அழிப்பதில் ஆரியமும், திராவிடமும் கூட்டாகச் சேர்ந்து செயல்படுகிறது என்பது இதன்மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. மக்கள் ஆதரவு பெற்ற ஆதினங்கள் மீதே ஆட்சி, அதிகாரத்தைப் பயன்படுத்தி பாஜக – திமுக கும்பல் அவதூறுகளைப் பரப்பி, கொலை மிரட்டல் விடுக்கும் கொடுஞ்செயலில் ஈடுபடுகிறது என்றால், இவர்களது ஆட்சியின் கீழ் வாழும் அப்பாவி மக்களின் நிலை என்ன? என்ற கேள்வியும் எழுகிறது. தமிழ்ச்சைவ திருமடங்கள் மீதும், அதன் தலைமை பதிகளான போற்றுதற்குரிய ஆதீனங்கள் மீதும் அவதூறுகள் பரப்புவதையோ, இழிவுப்படுத்தி அவமதிப்பதையோ அனுமதிக்க முடியாது; நாம் தமிழர் கட்சி அதனை ஒருபோதும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது; மக்களைத் திரட்டி போராட்டங்களை முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆகவே, பெருமதிப்பிற்குரிய தருமபுரம் ஆதினம் அருட்செல்வர் மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த சுவாமிகள் மீது அவதூறு பரப்பி, கொலை மிரட்டல் விடுத்த பாஜக – திமுக நிர்வாகிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

Read Previous

பாஜகவுடன் தான் கூட்டணி – ஓபிஎஸ்

Read Next

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular