
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்த 19 ஆம் தேதி வெளியானது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இப்படம், வசூல் ரீதியாகவும் நல்ல லாபத்தை ஈட்டியது. இதனால் மகிழ்ச்சி அடைந்த படக்குழுவினர், லியோவின் வெற்றியை கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.
அதன் படி, சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் புதன்கிழமை லியோ வெற்றி விழா கொண்டாட அனுமதி கோரி படக்குழுவினர் காவல்நிலையத்தில் மனு அளித்தனர். விழாவில் 6000 ரசிகர்கள் கலந்து கொள்வார்கள் என்றும், அதற்கு ஏற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், லியோ படத்தின் வெற்றி விழாவிற்கு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. அதாவது, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரசிகர்கள் பேருந்துகளில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 200 முதல் 300 கார்களில் மட்டுமே விழாவிற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேரு உள்விளையாட்டு அரங்கில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையிலான டிக்கெட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்குள் நிகழ்ச்சியை கண்டிப்பாக முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.