Biden says Israel has offered to Hamas a three-step road map to an enduring ceasefire
காஸாவில் போரை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு இஸ்ரேல் முன்வைத்துள்ள மூன்று கட்ட போர் நிறுத்தத்தை ஹமாஸ் படைகள் ஆதரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முழுமையான போர் நிறுத்தம்
இஸ்ரேல் முன்வைத்துள்ள திட்டம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் ஆதரித்து விளக்கமளித்துள்ளார். முதல் கட்டத்தில் 6 வாரங்கள் நீடிக்கும் முழுமையான போர் நிறுத்தம்.
அத்துடன் காஸாவில் அதிக மக்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேற வேண்டும். மேலும், அக்டோபர் 7ம் திகதி தாக்குதலுக்கு பின்னர் சிறைபிடிக்கப்பட்ட பணயக்கைதிகளில் குறீப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.
பாலஸ்தீன மக்கள் தங்கள் குடியிருப்புக்கு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள். காஸாவுக்கான மனிதாபிமான உதவிகள் நாளுக்கு 600 லொறிகள் என அதிகரிக்கப்படும். முதற்கட்ட 6 வார கால போர் நிறுத்தத்தின் போது இரு தரப்பும் அடுத்த கட்டம் தொடர்பில் விவாதித்து முடிவுக்கு வர வேண்டும்.
இரண்டாவது கட்டத்தில், காஸாவில் இருந்து இஸ்ரேல் படைகள் மொத்தமாக வெளியேற வேண்டும். எஞ்சியிருக்கும் பணயக்கைதிகள் அனைவரும் விடுக்கப்பட வேண்டும். இரு தரப்பும் ஒப்பந்தங்களில் அடிப்படையில் செயல்பட்டால், விரோதங்களை களைய முடியும் என ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று முதல் ஐந்து ஆண்டுகள்
மூன்றாவது கட்டத்தில் அமெரிக்கா மற்றும் சர்வதேச சமூகங்களின் ஒத்துழைப்புடன் காஸா பகுதியில் மறுசீரமைப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்படும். குடியிருப்புகள், பாடசாலைகள், மருத்துவமனைகள் என மீண்டும் கட்டப்படும்.
அத்துடன் ஹமாஸ் படைகள் மீண்டும் ஆயுதம் ஏந்தாத வகையில் பிராந்திய சகாக்களுடன் இணைந்து செயல்படவும் தயார் என ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார். இந்த புனரமைப்பு கட்டம் என்பது மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை ஆகும் என மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஹமாஸ் படைகள் இந்த ஒப்பங்களை மீறினால் இஸ்ரேல் மீண்டும் போர் தொடுக்கலாம் என்றும் ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார். ஆனால் எகிப்தும் கத்தாரும் ஹமாஸ் தொடர்பில் உறுதி அளிக்க வேண்டும் என்றும் இஸ்ரேல் குறித்து அமெரிக்கா பொறுப்பேற்கும் என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.