காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதா?- அன்புமணி இராமதாஸ் கண்டனம்

Dr ANBUMANI RAMADOSS

Dr ANBUMANI RAMADOSS

சென்னை மாநகராட்சி முடிவை திரும்பப்பெற வேண்டும்! – பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 358 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சிக் கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மாணவர்களின் நலன் சார்ந்த இந்தத் திட்டத்தை மாநகராட்சியே நடத்துவதற்கு மாறாக, தனியாரிடம் ஒப்படைத்து விட்டு மாநகராட்சி ஒதுங்கிக் கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாநகராட்சியின் முடிவு கண்டிக்கத்தக்கது.

மாநகராட்சியின் 358 பள்ளிகளில் பயிலும் 65,000 மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தை மாநகராட்சி மூலமாக செயல்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. அவ்வாறு செயல்படுத்துவதற்கு மாறாக இந்தத் திட்டத்தை தனியாரிடம் வழங்கி அதற்கு ரூ.19 கோடியை தாரைவார்ப்பது நியாயமல்ல. இதனால் பள்ளி மாணவர்களை விட தனியாரே நலம் பெறுவார்கள். தமிழ்நாடு முழுவதும் காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்து, அதற்கான சோதனை முயற்சியாக சென்னையில் இவ்வாறு செய்யப்பட்டிருக்கிறதோ? என்ற ஐயம் எழுகிறது.

சென்னை மாநகரைப் பொறுத்தவரை கடந்த ஆட்சியிலேயே காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. அட்சய பாத்திரம் என்ற தனியார் தொண்டு நிறுவனம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கு மாநகராட்சியோ, அரசோ அந்த நிறுவனத்திற்கு நேரடியாக எந்த நிதியும் வழங்கவில்லை. அதேநேரத்தில் ஆளுனர் மாளிகை மூலமாக ரூ.5 கோடி வழங்கப்பட்டது. அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அதன் காரணமாகத் தான் காலை உணவுத் திட்டத்தை அரசே நடத்தும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால், இப்போது அதே திட்டத்தை ரூ.19 கோடியை தனியாருக்கு கொடுத்து செயல்படுத்தச் சொல்வதான் நோக்கம் என்ன? அதிமுக அரசின் செயலுக்கும், திமுக அரசின் செயலுக்கும் என்ன வித்தியாசம்?

இவை அனைத்தையும் கடந்து, தனியாருக்கு வழங்கப்படவுள்ள நிதியைக் கொண்டு இந்தத் திட்டத்தை மாநகராட்சியே நடத்துவதில் என்ன சிக்கல்? தனியாரால் நடத்தப்பட வேண்டிய மது வணிகத்தை தமிழக அரசு விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அரசே செய்ய வேண்டிய கல்வி சேவையையும் உணவு வினியோகத்தையும் தனியாரிடம் ஒப்படைக்கின்றன. இதுவா மக்கள்நல அரசுக்கு அடையாளம்?

மாணவர்களின் நலன் சார்ந்த காலை உணவுத் திட்டம் தனியாரிடம் ஒப்படைக்கப்படக் கூடாது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சியின் தீர்மானம் திரும்பப்பெறப்பட வேண்டும். சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாநகராட்சி மூலமாகவே உணவு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Read Previous

மழை காரணமாக விடுமுறை அறிவிப்பு-சென்னை மாவட்ட ஆட்சியர்

Read Next

3வது டி20 – ஆஸ்திரேலியா அணி வெற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular